Guru Peyarchi 2026

குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பகவான் இப்போது கடகம் ராசியில் அமர்ந்துள்ளார்.

தமிழ் ஜோதிடத்தில் குரு மிகவும் சக்தி வாய்ந்த கிரகம். குரு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவது (குரு பெயர்ச்சி) முக்கியமான ஜோதிட நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்த பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எவ்வாறு பலன் தரும் என்பதை அறிய, கீழே உங்கள் ராசியைத் தேர்ந்தெடுத்துப் படிக்கவும்.

2026 - 2027 குரு பெயர்ச்சி எப்போது?

குரு பகவான் மிதுனம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இரு பஞ்சாங்க முறைகளின்படி பெயர்ச்சி நாள்:

  • வாக்கிய பஞ்சாங்கம்: 26th May 2026
  • திருக்கணித பஞ்சாங்கம்: 2nd June 2026
மேஷம் மேஷம் 4-ஆம் வீடு

உங்கள் ராசிக்கு தைரியஸ்தானத்திலிருந்து குரு பகவான் இப்போது சுகஸ்தானமான 4-ஆம் வீட்டுக்கு மாறுகிறார். உங்களுடைய ஆயுள் ஸ்தானம், தொழில் ஸ்தானம், விரய-மோக்ஷ ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

"மன்னவன் நான்கில் நிற்க மலைபோல துயர் வந்தாலும் கண் எதிரில் பனியாய் மாறும்! கல்வியால் வளர்ச்சி கூடும்! முன்னாளில் இருந்த நோய்கள் முற்றிலும் விலகி ஓடும்! பொன்னான ஒப்பந்தங்கள் போற்றும் விதம் வந்து சேரும்" என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

"குரு பார்க்க கோடி நன்மை" என்பது பழமொழி. குருவின் பார்வை பதியும் யோகமான ஸ்தானங்களின் வழியாக நற்பலன்கள் கிடைக்கும். இழப்புகளை ஈடுகட்டும் வாய்ப்பு உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.

பூர்வுண்ணியம், பாக்கியம், தொழில் யோகம், வாழ்க்கை அமைப்பு ஆகிய யாவும் சிறப்படையும். வீடு, மனை வாங்குவீர்கள். குடும்பத்தில் நல்ல விசேஷங்கள் நடக்கும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள். வீடு, வாகனம் மற்றும் நிலம் ஆகியவற்றுக்கான பராமரிப்புச் செலவுகள் கூடும். சுபகாரியங்களுக்காக செலவுகளும், அலைச்சலும் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை.

தொழில், வியாபாரம் விருத்தியடையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். பங்குதாரர்களிடம் நிதானம் தேவை.

உத்தியோகஸ்தர்கள் புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். சிலர் வேறு நல்ல வேலைக்கு மாறலாம். சிலருக்கு ஊர் மாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். வெளிநாட்டு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. வாகன வகையில் செலவுகள் ஏற்படலாம்.

4-ஆம் இடம் பூமி, வாகன யோகத்தைக் குறிக்கும். எனவே, பூமி, கட்டடம், வீடு போன்ற திட்டங்களிலும், ரியல் எஸ்டேட் மற்றும் வாகனத் தொழில்துறையிலும் உள்ளோருக்கு நன்மையே கிட்டும்.

ரிஷபம் ரிஷபம் 3-ஆம் வீடு

உங்கள் ராசிக்கு தனஸ்தானத்திலிருந்து குரு பகவான் இப்போது தைரியஸ்தானமான 3-ஆம் வீட்டுக்கு மாறுகிறார். உங்களுடைய களத்திர ஸ்தானம், பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். பொதுவாக இந்த இடத்தில் இருக்கும்போது குரு குடும்பத்தில் பிரச்னையை உருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும். இருப்பினும், குருவின் அனைத்துப் பார்வைகளும் சாதகமாக அமையும் என்பதால், பயம் வேண்டாம். "தீதிலாதொரு மூன்றில் துரியோதனன் படை மாண்டது" என்பது பாடல்.

களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் கணவன் - மனைவி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நடப்பீர்கள். இல்லறம் நல்லறமாகும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்றுசேருவார்கள். திருமணமாகாதவர்களுக்கு, திருமண வாய்ப்பு கைகூடி வரும். ஏராளமான சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆபரணங்கள், ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள், கூட்டாளிகளுடன் விட்டுக்கொடுத்து இணக்கமாகப் பழகுவீர்கள்.

சிறு காரியத்தடைகள் ஏற்படலாம். தைரியக் குறைவும், வீண் அலைச்சலும் உண்டாகும். உறவுகளுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். உடல் நலனில் கவனம் தேவை.

லாப ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால் தொட்டது துலங்கும். செல்வாக்கு, சொல்வாக்கு கூடும். பணப் புழக்கம் அதிகரிக்கும். தங்கம், நிலத்தில் பணத்தை முதலீடு செய்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உருவாகும். பங்காளிகள் மற்றும் பணியாட்களின் ஆதரவு கிட்டும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். சிலருக்கு தொழில் மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். உதிரி வருமானங்கள் கிட்டும். தைரியம் பிறக்கும்.

தந்தையால் மகிழ்ச்சி, உதவிகள், பொன், பொருள் சேர்க்கை உண்டு. பூர்வீகச் சொத்துகள் கைக்கு வரும். கடன் நிவர்த்தி, நோய் நிவர்த்தி, சத்ரு ஜெயம் ஆகிய நற்பலன்கள் கிட்டும்.

மிதுனம் மிதுனம் 2-ஆம் வீடு

உங்கள் ராசிக்கு ஜென்ம ஸ்தானத்திலிருந்து குரு பகவான் இப்போது தன-குடும்ப-வாக்கு ஸ்தானமான 2-ஆம் வீட்டுக்கு மாறுகிறார். உங்களுடைய ருண-ரோக-சத்ரு ஸ்தானம், ஆயுள் ஸ்தானம், கர்ம-தொழில் ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

குரு தன-குடும்ப-வாக்கு ஸ்தானத்தில் இடம்பெறுவது மிகவும் நல்லது. "இரண்டிலே குருதான் வந்தால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும்! ஆறினை குருதான் பார்த்தால் அடைந்திடும் கடன்கள் யாவும்! எட்டினை குருதான் பார்த்தால் இருந்த நோய் மறைந்து போகும்! பத்தினை குருதான் பார்த்தால் பாரினில் தொழில் வளம் பெருகும்!" என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

கடன் சுமை குறையும். மறைமுக சேமிப்புகளும், வருமானங்களும் அதிகரிக்கும். வீடு, வாகனம், நிலம் போன்றவற்றில் மாற்றம் செய்வீர்கள். புதிய வீடு வாங்கும் யோகமுண்டு. திருமணம் கூடிவரும். குடும்பத்தேவை அனைத்தும் நிறைவேறும். கணவன் - மனைவி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நடப்பீர்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். நண்பர்களால் உதவி கிடைக்கும். ஆயுள் ஸ்தானத்தில் குருபார்வை பதிவதால் உடல் பலம் கூடும். தொல்லை கொடுத்து வந்த வியாதிகள் நீங்கும்.

வியாபாரிகள் தங்கள் தொழிலில் அமோக வளர்ச்சியும் தாராள லாபமும் பெறுவர். தனவரவு பெருகும். பேரும் புகழும் கிடைக்கும். மரியாதையும், பொறுப்புகளும் தேடி வரும். தொழில் துறையில், வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, கவுரவ பதவிகள் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை மற்றும் உயர் கல்விக்கு வாய்ப்பு உண்டு.

ருண, ரோக, சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டை குரு பார்ப்பதால் கொடுக்கல், வாங்கலில் நின்றுபோன பணம் வசூலாகும். கடன்கள் அடைபடும். வழக்குகளில் ஏற்பட்ட காலதாமதங்கள், அலைச்சல் போன்றவை நீங்கி உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தந்தையின் உடல்நலம் சீராகும். மருத்துவ செலவுகள் குறையும். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவி கிடைக்கும்.

கடகம் கடகம் 1-ஆம் வீடு

உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்திலிருந்து குரு பகவான் இப்போது ஜென்ம ஸ்தானமான 1-ஆம் வீடு, அதாவது, உங்கள் ராசிக்கு, மாறுகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

"ஜென்ம ராமர் வனத்திலே" என்பது பழமொழி. ராசியில் குருபகவான் அமர்வது ஜென்மகுரு என்கிற நிலையாகும். இருப்பினும், நன்மையே செய்வார். பயமே வேண்டாம். மனம் ஆன்மிகத்தில் லயிக்கும். கோயில் குளம் என்று சென்று வருவீர்கள்.

"குரு பார்க்க கோடி நன்மை" என்பது பழமொழி. ஜென்மத்தில் உச்சம்பெற்ற குருவின் பார்வை பதியும் யோகமான ஸ்தானங்களின் வழியாக நற்பலன்கள் கிடைக்கும். கௌரவம், அந்தஸ்து உயரும். உங்களின் அறிவாற்றலும் சாமர்த்தியமும் வெளிப்படும். உங்கள் நீண்டகால திட்டங்கள் நிறைவேறும்.

குடும்பத்தில் பணத்தேவை அதிகரிக்கும். கையிருப்பு கரைவதோடு கடன் வாங்க வேண்டிய நிர்பந்தமும் உருவாகும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு கூடும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் கூடும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். திருமணத்தடை விலகும். நல்ல முறையில் திருமணம் கூடும். திருமணமான தம்பதிகளுக்கு வாரிசு கிடைக்கும்.

பூர்வீகச் சொத்தில் கிடைக்கும் வருமானம் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவும். தொழில் சார்ந்த வகையில் தடைகளை எதிர்த்துப் போராட நேரிடும். தடைப்பட்டிருந்த திருமணம், கல்வி எல்லாம் நிறைவேறும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம்.

தொழிலில் நிதானம், கடின உழைப்பு ஆகியவற்றை பின்பற்றுவது அவசியம். எதிரிகள் விலகுவர். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். பொது நலத்தில் ஈடுபாடு இருப்பவர்களுக்குப் புதிய பதவிகளும், பொறுப்புகளும் வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்கள் பணிகளில் தாமத நிலையைச் சந்திப்பார்கள். வருமானம் உயரும். பதவி மாற்றம், இடமாற்றம் உண்டாகும்.

சிம்மம் சிம்மம் 12-ஆம் வீடு

உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்திலிருந்து குரு பகவான் இப்போது விரய-மோக்ஷ ஸ்தானமான 12-ஆம் வீட்டுக்கு மாறுகிறார். உங்களுடைய சுக ஸ்தானம், ருண-ரோக-சத்ரு ஸ்தானம், ஆயுள் ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

"இடமது பன்னிரெண்டில் இயல்பாகக் குருவும் வந்தால் கடமையில் கவனம் தேவை! காசுகள் விரயம் ஆகும்! உடமையாய் சொத்து சேரும்! உடல் நலம் அச்சுறுத்தும், தடம்புராளமல் வாழத் தைரியம் கைகொடுக்கும்!" என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. இருப்பினும், குரு நன்மையே செய்வார். பயமே வேண்டாம்.

"குரு பார்க்க கோடி நன்மை" என்பது பழமொழி. உச்சம்பெற்ற குருவின் பார்வை பதியும் யோகமான ஸ்தானங்களின் வழியாக நற்பலன்கள் கிடைக்கும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். சுபவிரயங்கள் அதிகரிக்கும்.

"கெட்டவன் கெட்டியில் கிட்டும் ராஜ யோகம்" என்பதற்கேற்ப பன்னிரெண்டாம் இடத்தில் இருந்து ஆறாம் வீட்டை பார்ப்பதால் எங்கும், எதிலும் வெற்றி உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிட்டும். வியாபாரம் அமோகமாக நடக்கும். திறமை மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து உதவிக்கரம் நீட்டுவர். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் இப்பொழுது நண்பர்களாக மாறுவர். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.

தாயின் ஆதரவு பெருகும். தாய்வழி தனலாபம் ஒருசிலருக்கு வந்து சேரும். கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். வீடு, மனை, சுபகாரியம், நற்செயல்கள் செய்வதற்கு இருந்த தடை யாவும் நீங்கும். வாரிசுகளின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றை செய்து மகிழ்வீர்கள். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டு.

கடமையில் கொஞ்சம் கவனம் தேவை. உத்தியோகம், தொழிலில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்ப்புகள் விலகும். புதிய வாகன யோகம் உண்டு.

வியாபாரம் தூண்டுபிடிக்கும். லாபம் கூடும். தொழில் செலவுகள் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் நிதானம் அவசியம்.

கன்னி கன்னி 11-ஆம் வீடு

உங்கள் ராசிக்கு தொழில்-ஜீவன ஸ்தானத்திலிருந்து குரு பகவான் இப்போது லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டுக்கு மாறுகிறார். உங்களுடைய தைரிய-வீர்ய-இளைய சகோதர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

"பதினோராம் இடத்தில் வந்து பார்த்திடும் குருதான் நின்றால், மதிப்பான வாழ்க்கை சேரும்! மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்! துதிக்கின்ற தெய்வம் தன்னை, துணையாக்கி பார்த்திருந்தால், விதிகூட மாறிப் போகும்! வெற்றிகள் நாளும் சேரும்!" என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. உங்கள் சொல்வாக்கு, செல்வாக்கு உயரும். பொருளாதாரம் ஏற்றம் அடையும். உங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் தோல்வி அடைவார்கள்.

குடும்பத்தினரின் அனைத்து தேவைகளும் நிறைவேறும். திருமணத் தடை அகலும். சுபநிகழ்ச்சிகளை தலைமையேற்று நடத்துவீர்கள். வீடு, வாகனத்தில் விரும்பிய மாற்றத்தை நிறைவேற்றுவீர்கள். பொன் பொருள் சேரும்.

ஒரு வீட்டின் பாவத்தின் அதிபதி அந்த இடத்தை பார்ப்பது விசேஷ யோகமாகும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். புத்திர பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வும், சலுகைகளும் பெறுவர். வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் அமையும். வேலை இடமாற்றம், பதவி உயர்வும் ஏற்படும்.

வியாபாரம் விருத்தியாகும். இரட்டிப்பு லாபம் கிட்டும். நல்ல கூட்டாளிகள் கிட்டுவர். போட்டிகள் நீங்கும். பணத் தேவைகள் பூர்த்தியாகும். தனியாகத் தொழில் தொடங்கும் யோகம் உண்டு.

மாணவர்கள் அக்கறையுடன் படித்து கல்வியில் வளர்ச்சி காண்பார்கள். வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.

துலாம் துலாம் 10-ஆம் வீடு

உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்திலிருந்து குரு பகவான் இப்போது தொழில்-ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டுக்கு மாறுகிறார். உங்களுடைய தன-வாக்கு-குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானம் மற்றும் ருண-ரோக-சத்ரு ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

"பத்தில் குரு பதவிக்கு இடர்" என்பது ஜோதிட சாஸ்திரம். என்றாலும் ஜென்ம ஜாதகத்தில் உள்ள சந்திரனுக்கு பத்தாம் இடத்தில் குரு அமர்வதால் கஜகேசரி யோக பலனைத் தரும். நன்மையும் சிரமமும் கலந்த பலன் உண்டாகும். தாராள பணப்புழக்கம் இருப்பதால் சிரமங்கள் குறையும். உடல்நலனில் அக்கறை ஏற்படும். எதிரியால் இருந்து வந்த தொல்லை குறையும். வழக்கு விவகாரங்களில் அனுகூலமான தீர்வு கிடைக்கும்.

"இரண்டினை குருதான் பார்த்தால் இல்லத்தில் அமைதி கூடும்! நான்கினைக் குருதான் பார்த்தால் நல்லதோர் சுகங்கள் வாய்க்கும்! ஆறினைக் குருதான் பார்த்தால் அகிலத்தில் கடன்கள் தீரும்!" என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. நோய்நொடி அனைத்தும் விலகி ஆரோக்கியம் மேம்படும். உங்கள் செல்வாக்கு, சொல்வாக்கு உயரும். சொந்த, பந்தங்கள் இடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் மறையும். குடும்பத்தில் சுப விசேஷங்களுக்கு குறைவிருக்காது. கணவன் - மனைவியிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

தொழிலில் மாற்றம் ஏற்படும் நேரம். புது வாகன யோகம் உண்டு. தொழில் சார்ந்த பயணத்தை அடிக்கடி மேற்கொள்வீர்கள். வியாபாரம் லாபகரமாக நடக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். கடன்கள் தீரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகளும், படிவகளும் கிட்டும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். பணி மாற்றம் கிடைக்கும். உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளும் கிட்டும்.

6-ஆம் இடத்தை குரு பார்ப்பதால், சில சமயம் சில இடையூறுகளைச் சந்தித்தாலும், முடிவில் சத்ரு ஜெயம், கடன் நிவர்த்தி, பீடை நிவர்த்தி ஆகிய நன்மைகளே நடக்கும்.

விருச்சிகம் விருச்சிகம் 9-ஆம் வீடு

உங்கள் ராசிக்கு ஆயுள் ஸ்தானத்திலிருந்து குரு பகவான் இப்போது பாக்ய ஸ்தானமான 9-ஆம் வீட்டுக்கு மாறுகிறார். உங்களுடைய ராசி, சகோதர சகாய ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய-புத்திர ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

"ஒன்பதில் குருவும் வந்தால் ஒப்பற்ற வாழ்க்கை சேரும்! பொன் பொருள் அதிகரிக்கும்! பூமியால் லாபம் கிட்டும்! நண்பர்கள் ஒத்துழைப்பால் நலம்யாவும் வந்து கூடும்! இன்பத்தின் எல்லை காண இறையருள் கைகொடுக்கும்!" என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. உங்கள் எண்ணங்கள் எல்லாம் ஈடேறும். பணப்பிரச்சினைகள் அகலும். பட்ட கடன் தீரும். பிணக்குகள் மாறும். உத்தியோகம், தொழிலில் நீங்கள் எடுத்த முடிவு வெற்றி பெறும். நண்பர்கள் ஒத்துழைப்போடு நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும். மாபெரும் பொறுப்புகளும், பதவிகளும் உங்களுக்கு வந்து சேரும்.

"குரு பார்க்க கோடி நன்மை" என்பது பழமொழி. குருவின் பார்வை பதியும் யோகமான ஸ்தானங்களின் வழியாக நற்பலன்கள் கிடைக்கும். குரு ஜென்ம ராசியைப் பார்ப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும்; மதிப்பு, மரியாதை, கௌரவம் உயரும். சகோதரப் பகை மாறும். பாகப்பிரிவினைகள் சுமுகமாகும். வழக்குகளில் வெற்றி கிட்டும். வீடு கட்டிக் குடியேறுவீர்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உடல்நலம் நன்றாக இருக்கும். தம்பதியர் ஒற்றுமையாக நடந்து நன்மதிப்பைப் பெறுவர்.

வேலையில்லாதவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிட்டும். பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்த்தபடி இட மாற்றம், ஊர் மாற்றம் கிட்டும். புது வீடு, வாகன யோகம் உண்டு. வெளிநாட்டு வேலைவாய்ப்பும் கிட்டும்.

வியாபாரம் சாதகமாக இருக்கும். இரட்டிப்பு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தேக்க நிலை நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும். உங்கள் செல்வாக்கு உயரும்.

தனுசு தனுசு 8-ஆம் வீடு

உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானத்திலிருந்து குரு பகவான் இப்போது ஆயுள் ஸ்தானமான 8-ஆம் வீட்டுக்கு மாறுகிறார். உங்களுடைய விரய ஸ்தானம், தன-வாக்கு-குடும்ப ஸ்தானம் மற்றும் சுக ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீண் சந்தேகங்கள், மனஅழுத்தம், கோபதாபங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் நலனில் கவனம் தேவை. பணவரவு ஓரளவு நன்றாக இருக்கும் என்றாலும் கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

"எட்டிலே குருதான் வந்தால் இரண்டினை பார்ப்பதாலே பெட்டியில் பணமும் சேரும்! பெருமையும் வந்து கூடும்! கட்டாயம் குருவை நீங்கள் கைகூப்பி தொழுது நின்றால், திட்டங்கள் வெற்றி யாகும்! தெய்வங்கள் துணையாய் நிற்கும்!" என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. குருவின் பார்வை பதியும் யோகமான ஸ்தானங்களின் வழியாக நற்பலன்கள் கிடைக்கும்.

தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து குடும்ப மகிழ்ச்சியை பாதுகாத்திடுவர். நண்பர்களின் உதவி கிடைக்கும். குழந்தைகளின் திருமணம், படிப்புச் செலவு உள்ளிட்ட சுபச்செலவு அதிகரிக்கும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. வேலையில் மாற்றம் ஏற்படலாம். வெளியூர் பயணம் நன்மையைத் தரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். பூர்வீக சொத்துகளில் இருந்து உங்களுக்கு சேர வேண்டிய பங்கு கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பணிச்சுமை அதிகரிக்கும். வியாபார இடத்தை மாற்றவேண்டி வரலாம். தளராத முயற்சியால் இலக்குகளை நிறைவேற்றுவீர்கள். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். கூட்டாளிகள் விலகிச் செல்ல நேரிடலாம். வியாபாரிகள் விற்பனை இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சிரமம் குறுகிடும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மகரம் மகரம் 7-ஆம் வீடு

உங்கள் ராசிக்கு ருண-ரோக-சத்ரு ஸ்தானத்திலிருந்து குரு பகவான் இப்போது களத்திர ஸ்தானமான 7-ஆம் வீட்டுக்கு மாறுகிறார். உங்களுடைய ராசி, லாப ஸ்தானம் மற்றும் தைரிய-வீர்ய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

"ஏழினில் குருதான் வந்தால் எதிர்காலம் சிறப்பாய் மாறும்! வாழ்விலே வசந்தம் சேரும்! வருமானம் திருப்தி யாகும்! சூழ்ந்திடும் பகை விலகும்! தொடுத்திடும் மாலை சேரும்! கோள்களில் குருவை நீங்கள் கும்பிட்டால் நலம் கிடைக்கும்!" என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. பண மழையிலும், பாச மழையிலும் நனையப் போகிறீர்கள். ஆதாயமும் பணவரவும் உண்டு. மன துணிவு, தெளிவான சிந்தனை திறன் ஏற்படும். புகழ், அந்தஸ்தைப் பெறுவீர்கள். உடல்நலம் சிறந்து, புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.

வருமானம் பன்மடங்கு பெருகும். திருமண முயற்சிகள் நிறைவேறும். வீடு வாங்கவோ அல்லது கட்டவோ வழி பிறக்கும். வாகன வகையிலும் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். ஒத்து வராத உடன்பிறப்புகள் ஒத்து வருவர். சகோதர வழியில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடத்திட யோகமுண்டு. தாயின் ஆரோக்கியம் சீர்பெறும்.

சந்திரனுக்கு ஏழில் கோசார குரு அமர்ந்து கஜகேசரி யோகத்தை உருவாக்குகிறது. இதனால் தொட்டது துலங்கும். புதிய பதவி, அளப்பரிய நற்பலன் எளிதாக வந்துசேரும். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து கொள்வர்.

உற்பத்தியை அதிகரித்து தொழிலில் சிறப்பு ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். பயணங்களால் பயன் பெறுவீர்கள். உங்கள் அந்தஸ்து உயரும்.

உங்களுக்கு பணியிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, புதிய பொறுப்பு, சலுகைகளை பெறுவீர்கள். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையின் சம்பாத்யமும் கூடும். வாரிசுகளின் சம்பாத்யமும் வந்து சேரும். உதிரி வருமானங்கள் பெருகும்.

கும்பம் கும்பம் 6-ஆம் வீடு

உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திலிருந்து குரு பகவான் இப்போது ருண-ரோக-சத்ரு ஸ்தானமான 6-ஆம் வீட்டுக்கு மாறுகிறார். உங்களுடைய தொழில்-ஜீவன ஸ்தானம், விரய ஸ்தானம் மற்றும் குடும்ப தன ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

இந்த 6-ஆம் இடம் என்பது, கடன், வியாதி, எதிரி, போட்டி ஆகியவற்றைக் குறிக்கும். இவற்றைக் குரு அதிகமாக்குவார்.

"தேவகுரு ஆறில் வந்தால் தேவைகள் பூர்த்தியாகும்! ஆவல்கள் தீர வேண்டின் அனுசரிப்பும் தேவையாகும்! கோபத்தை விலக்கினால் தான் குடும்பத்தில் அமைதி கூடும்! தீபத்தில் குருவைக் கண்டு தரிசித்தால் நன்மை சேரும்!" என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. ஆரோக்கிய பாதிப்பும், சிறு சிறு தொல்லைகளும், விரயங்களும் உருவாகலாம்.

இருப்பினும், "குரு பார்க்க கோடி நன்மை" என்பது பழமொழி. குருவின் பார்வை பதியும் யோகமான ஸ்தானங்களின் வழியாக நற்பலன்கள் கிடைக்கும். பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க பணம் வந்து கொண்டேயிருக்கும். கடன் வாங்குவதை அறவே தவிர்க்க வேண்டும்.

குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். இருந்தாலும் மனதளவில் பிரச்னைக்கு உள்ளாவீர்கள். வீடு, வாகனத்தில் புதிய மாற்றத்தைத் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுவர். சகோதர, சகோதரிகள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படும் இடமுண்டு. தாயின் உடல்நிலை பாதிக்கலாம்.

வியாபாரம் நன்றாக நடக்கும். கடன்கள் தீரும். பயணங்கள் அதிகரிக்கும். தொழில் அதிபர்களுக்கு அலைச்சல் கூடும். விற்பனையில் சுமாரான இலக்கை அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு, பணிச்சுமைக்கு ஆளாவதோடு, எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். பதவி உயர்வு அல்லது இடமாற்றம் ஏற்படலாம். சொந்தத் தொழில் தொடங்கும் எண்ணம் ஈடேறும்.

மீனம் மீனம் 5-ஆம் வீடு

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்திலிருந்து குரு பகவான் இப்போது பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ஆம் வீட்டுக்கு மாறுகிறார். உங்களுடைய ராசி, பிதா-பாக்கியஸ்தானம் மற்றும் லாப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

இந்த 5-ஆம் இடம் என்பது, குருவுக்கு அதிர்ஷ்டமான இடம். அத்தோடு, அவர் நல்ல இடங்களைப் பார்ப்பதாலும் இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு யோகமாகும்.

"ஐந்தினில் குருதான் வந்தால் அனைத்திலும் வெற்றி கிட்டும்! பைதனில் பணமும் சேரும்! பாராளும் யோகம் வாய்க்கும்! வையகம் போற்றும் வண்ணம் வாழ்க்கையும் அமையும் உண்மை! செய்தொழில் வளர்ச்சி யாகும்! செல்வாக்கும் அதிகரிக்கும்!" என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

குடும்பத்திற்கான முக்கிய தேவைகள் நிறைவேறும். சகல சௌபாக்கிய வசதிகளையும் பெறுவீர்கள். வீடு, வாகன அபிவிருத்தி உண்டாகும். கையில் பணம் புரளும். கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். திருமண வயதினருக்கு நல்ல வரன் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்ய யோகம் உண்டு. தேக ஆரோக்யத்தில் நன்மை ஏற்படும். தாயார் தாய் வழி உறவினர்களுடன் சுமுக நிலைமை உண்டாகும்.

வாழ்க்கைத்துணையுடன் உறவு சிறக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டு. வழக்குகளில் உங்கள் பக்கமாக வெற்றிகிடைக்கும். தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும்.

வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளைச் செய்வர். எதிர்பார்த்ததைக் காட்டிலும், லாபம் தொழிலில் இரு மடங்காக வந்து சேரும். உத்தியோகத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பங்குதாரர்களிடம் கவனம் தேவை.

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும் நேரம். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு, அரசு வழிச் சலுகைகள் அனைத்தும் கிடைக்கப் போகிறது. வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. கவுரவ பதவிகளும் தேடி வரும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வெளிநாட்டுத் தொழில் முயற்சிகள் கைகூடும்.